Tuesday, March 31, 2009

ஏப்ரல் ஃபூல் ஆகாமல் தப்பிப்பது எப்படி?

தலைப்பை நம்ம்ம்ம்பி... வந்து இப்படி ஏப்ரல் ஃபூல் ஆகிடீங்களே?

வேற ஒன்னும் இல்லைங்க! இப்படி கவர்ச்சிகரமான தலைப்பை பார்த்துவிட்டு ஏமாறாமல் இருந்தாலே போதும்!

டென்ஷன் ஆகவேண்டாம்! ஒரு ஜாலிக்குதான்!

Friday, March 20, 2009

புவி வெப்பமயதாதலை தடுக்க ஒன்று சேருங்கள் 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று!

புவி வெப்பமயதாதலை தடுக்க முதன் முதலில் சிட்னியில் 2007 ஆம் ஆண்டு எர்த் ஹவர் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்வாக 2.2 மில்லியன் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் ஒரு மணி நேரத்திற்கு அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டது.

பின் இந்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் மெல்ல மெல்லப் பரவி 2008 ஆம் ஆண்டு 50 மில்லியன் மக்கள் ஒரு மணி நேரத்திற்கு அனைத்து விளக்குகளையும் நிறுத்தி தங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.

முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்தியா இதில் இணைய உள்ளது. டெல்லி, மும்பை உள்பட 825 நகரங்கள் உள்ளிட்ட 80 நாடுகளில் வரும் சனிக் கிழமை அதாவது 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனைத்து விளக்குகளையும் அணைத்து தங்கள் ஒத்துழைப்பை நல்க இருக்கிறார்கள்.

எனவே அன்பர்களே நீங்களும் அந்த நேரத்தில் உங்கள் வீடு மன்றும் வணிக நிறுவனங்களில் அனைத்து விளக்குகளையும் அணைத்து தங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள். இந்த செய்தியை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நபர்களுக்குத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மேலும் இது சம்பந்தமான தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

http://www.earthhour.in/about-us.aspx

முடிந்த அளவு CFL எனப்படும் விளக்குகளையே உபயோகப் படுத்துங்கள்.
நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த உலகில் நிம்மதியாக வாழ வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். இது நம் அனைவரின் இன்றியமையாத கடமை என்பதை உணருங்கள்!

Tuesday, March 17, 2009

நகைச்சுவை தொகுப்பு - 1

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?


தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?


பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

Thursday, March 12, 2009

வால்பாறை - சோலையார் -- அதிராம்பள்ளி - ஒரு ஜாலி டூர்

ரொம்ப நாட்களாகவே எங்காவது பிக்னிக் சென்று வர நினைத்திருந்து ஒரு வழியாக சென்ற சனிக்கிழமை வால்பாறை சென்று வர நண்பர்கள் 5 பேராக புறப்பட்டோம்.

காலை 8.30 மணிக்கு வால்பாறை அடிவாரம் சென்று விட்டோம். அங்குதான் வேதாந்த மகாரிஷியின் மடம், ஆழியார் அணை போன்றவை உள்ளது. கோடை தொடக்கம் என்பதால் அணையில் நீர் குறைவாகத்தான் இருந்தது. அங்கிருந்து வால்பாறை 40 கி.மீ. மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். எதிர்பார்த்த அளவு பசுமையாக இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் மனம் கொஞ்சம் பதறத்தான் செய்தது. வழியில் நிறுத்தி போட்டோவும் எடுத்தோம். மலையில் ஏற ஏற தமிழில் பாடிக் கொண்டிருந்த சூர்யன் எப்.எம் மலையாளத்தில் பாடத் தொடங்கிவிட்டது. இருந்தாலும் மழைக் காலம் முடிவில் நண்பர்கள் சென்று வந்த போது எடுத்து வந்த போட்டோவைப் பாருங்கள் கீழே .











காலை 9.45 மணிக்கு வால்பாறை பாலாஜி கோவிலுக்கு சென்று சாமிக் கும்பிட்டோம். இது ஒரு தனியார் எஸ்டேட் நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படுகிறது.

வழி நெடுக இருக்கும் பேருந்து நிறுத்தம் வெள்ளைத்துரை கனவான்களின் பெயர்களில்தான் இன்றும் இருக்கிறது, சுதந்திரம் பெற்று விட்ட போதும். காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து காபி, தேயிலை தோட்டங்களாக மாற்றிக் கொண்டிருகின்றனர். அதனால்தானோ என்னவோ குளிர்ந்த காற்றுக் கூட வீசவில்லை. ஊர் கொஞ்சம் சிறியதுதான்.
11.30 மணிக்கு சோலையார் அணை சென்றோம். அங்கும் நீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. அங்குதான் சுமாராக இருந்த ஹோடேலில் சாப்பிடோம். என்னடா இது, இந்த காஞ்சு போன ஏரியாவைப் பார்க்கத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோமா என்று வருத்தப் பட்டபோது நண்பர் ஒருவர் கேரளாவில் உள்ள (சுமார் 70 கி.மீ.) அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவோம் என்றார். இந்த நீர் வீழ்ச்சியை நீங்கள் அனைவருமே திரைப் படத்தில் பார்த்திருப்பீர்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல், ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொண்டு (மறக்க முடியுமா என்ன?) குதிப்பார்களே அதேதான். ஏய் படத்தில் நம்ம சரத்தும், நமீதாவும் அர்ஜுனா பாட்டுக்கு ஆடுவார்களே அதே நீர் வீழ்ச்சிதான்.
கேரள செக் போஸ்டில் நிறுத்தி தகவல்களை அளித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். கொஞ்ச தூரம் சென்ற உடனே அடர்ந்த காடு ஆரம்பமாகி விடுகிறது. இரண்டு வித்தியாசங்களை உணர முடிந்தது. ஒன்று தமிழக எல்லையில் சாலை வசதி நன்றாக இருக்கிறது. ஆனால் கேரள எல்லையில் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இரண்டாவது தமிழக எல்லையில் காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேரள எல்லையில் வனத்தை போற்றிப் பாதுகாக்கிறார்கள். தானாக விழும் மரத்தை கூட அப்படியே விட்டு விடுகிறார்கள். இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு வளர்க்கிறார்கள். "God's Own Country" என்று சொல்லிக் கொள்ள முழுத் தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது.

யானை நடமாட்டமுள்ளப் பகுதி என்பதை யானையின் லத்தியை(கழிவு) வைத்து அறிந்து கொள்ள முடிந்தது. மனதில் லேசாக ஒரு பீதி பரவ ஆரம்பித்தது. எதிரில் எந்த வாகனமும் வரவில்லை. எந்த கிராமமும் கூட வழியில் இல்லை. ஒருப் பக்கம் யானை பயம், மறுப்பக்கம் ஆழமான பள்ளத்தாக்கு, கொஞ்சம் திரில்லிங்கான பயணமாகத்தான் இருந்தது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று பயந்தோம். ஒரு நண்பர் ரிஸ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றார். மற்றொரு நண்பரோ அட எங்கப்பா இப்ப ரஸ்க் சாப்பிடுவதே ரிஸ்க் ஆகி விடும் போலிருக்கிறது என்றார். பயம் இருந்தாலும் நண்பர்களுக்குள் கமெண்ட்ஸ் அடித்துக் கொண்டு சென்றதால் மிகவும் ஜாலியாகத்தான் இருந்தது.

வழியில் ஒரு காட்டருவி. ஆஹா! அற்புதம்! என்ன ஒரு ஜில்! அதை கீழே இருக்கும் வீடியோவில் நீங்களே பாருங்கள்! ஹோ என்ற இரைச்சலுடன் ஸ்பீக்கர் ஆன் செய்து கேளுங்கள்!




ஒரு வழியாக 3.30 மணிக்கு அதிராம்பள்ளி அடைந்தோம். டுரிஸ்ட் ஸ்பாட் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு ஒரு அரை கி.மீ. நடைப் பயணத்தில் நீர் வீழ்ச்சிக்கு சென்றோம். அடடா! என்ன அற்புதம்! வாவ்! இயற்கையின் அழகிற்கு ஈடேது? அருவிக்கு அருகில் செல்ல ஒரு செங்குத்தானப் பாதையில் சென்றோம். வர்ணிக்க வார்த்தை இல்லை. தண்ணீர் பாறையில் பட்டு தெளிக்கும் சாரலில் ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து நின்றால் குளித்து விடுவீர்கள். ஹோ என்ற இரைச்சலுடன் ஸ்பீக்கர் ஆன் செய்து கேளுங்கள்!



சாரலின் அழகை மட்டுமே ரசிக்க முடியுமா என்ன? அதை ரசிக்கும் கேரளத்துப் பொண்ணுங்களையும்தான்! சும்மா சொல்ல கூடாது பாஸ்! நம்ம ஊர் பொண்ணுங்களை விட அங்கே கொஞ்சம் சூபெர்தான்! கூட வந்த நண்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம், தமிழ் நாட்டுக்கு ஒரு பிரமன், கேரளத்துக்கு ஒரு பிரமனா என்று? (கொஞ்சம் ஓவறாகத்தான் போய்க்கிட்டு இருக்கோ? வீட்டில் தங்கமணி இதை எல்லாம் படிக்க மாட்டார்கள் என்ற தைரியம்தான். சரி போதும் நிப்பாட்டிக்குவோம்.)





அருவியில் குளிக்க முடியாது. மேலே இருக்கும் ஆற்றில் ஒரு குளியல் போட்டு விட்டு ஒரு 2 மணி நேரம் செலவு செய்து விட்டுப் புறப்பட மனம் இல்லாமல் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

Friday, March 6, 2009

கிரெடிட் கார்டுடன் என் அனுபவங்கள்!



கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டை உபயோகித்து வந்தேன்! அதில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒருவருக்கேனும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த பதிவு!

என் அலுவலகத்தின் வெளியே தற்காலிக கடைக் கட்டி கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் நீண்ட யோசனைக்குப் பிறகு சென்று, ஒரு சுபயோக சுப தினத்தில் கிரெடிட் கார்டுக்கான படிவத்தை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டேன். மற்றதை அவர்களே பூர்த்தி செய்து கொண்டார்கள்! ஒரு புகைப்படமும், என் சம்பள ரசீதையும், முகவரிக்கான சான்றையும் கொடுத்தேன்! கூவி கூவி விற்று கொண்டிருந்ததால் உடனே கொடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந்தேன்! ஆனால் அவர்கள் நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்து அந்த முகவரியில்தான் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொண்டே தபாலில் கிரெடிட் கார்டு அனுப்பி வைத்தார்கள்!

கார்டு வந்தவுடன் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று பதிவும் செய்து கொண்டேன்! அந்த கிரெடிட் கார்டில் முன் பக்கத்தில் என் பெயரும், அந்த கிரெடிட் கார்டு எந்த மாதம்/வருடம் வரை உபயோகிக்கலாம் என்ற விபரமும், நான்கு நான்கு பிரிவாகப் பிரித்து 16 இலக்கங்களில் கிரெடிட் கார்டு எண்ணும் இருந்தது. பின் புறத்தில் என் கையொப்பத்தை இட்டேன். அங்கே மூன்று இலக்கங்களில் CVV (CARD VERIFICATION VALUE CODE) எண் இருந்தது. பின் ஒரு வாரத்தில் தபாலில் நான்கு இலக்க PIN நம்பரும் வந்தது!


ஆண்டு கட்டணம் என்று எதுவும் இல்லை. இப்பொழுதெல்லாம் அனைத்து வங்கிகளுமே இலவசமாகவே கிரெடிட் கார்டு அளிக்கிறார்கள்.


கிரெடிட் லிமிட்:
என் வருமானத்திற்கு ஏற்ப 35000 ரூபாய் எனக்கு லிமிட்டாக கொடுத்திருந்தார்கள். இதில் அதிகபட்சம் 14000 ரூபாய் வரை நான் பணமாக எடுத்துக் கொள்ள முடியும். ATM சென்று அந்த நான்கு இலக்க PIN ஐ உபயோகித்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அப்படி எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு ATM சேவை கட்டணமாக எடுத்துக் கொள்வார்கள். மேலும் அன்றிலுருந்தே வட்டி கணக்கிட ஆரம்பித்து விடுவார்கள். இதுவே நீங்கள் கடைகளில் பொருட்களாக வாங்கினால் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்.

இங்கே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதாவது மாதம் ஒரு முறை நமக்கு பில் அனுப்புவார்கள். எடுத்துகாட்டாக எனக்கு ஒரு
மாத பில் என்பது சென்ற மாத 3 ஆம் தேதியிலிருந்து இந்த மாத 2 ஆம் தேதிவரை. இதற்கான பில் தொகையை இந்த மாத 22 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். எனவே சென்ற மாதம் 3 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதற்கான தொகையை 50 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதிக்குள் கட்டி விட வேண்டும். அதுவே இந்த மாதம் 2 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதை 20 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதியே செலுத்தி விட வேண்டும். இதைதான் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள் என்று சொன்னேன்.


இவ்வாறு அனுப்பும் மொத்த பில் தொகையில் குறைந்த பட்சம் 5 சதவீதம் கட்டினால் போதும் என்பார்கள். மீதமுள்ள தொகையை வட்டி போட்டு அடுத்தடுத்த மாதங்களில் நீங்கள் செலுத்தலாம். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பில் தொகை மொத்தமாக செலுத்தினால் மட்டுமே "குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்" என்பது நீங்கள் தொடர்ந்து வாங்கும் பொருட்களுக்கு பொருந்தும். அதாவது சென்ற மாத பில் தொகை அனைத்தும் நீங்கள் செலுத்தி இருந்தால் மட்டுமே இந்த மாதத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வட்டி கணக்கிட மாட்டார்கள், இல்லை எனில் பொருட்கள் வாங்கிய தினத்திலிருந்தே வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள்.


கடைகளில் கிரெடிட் கார்டு:
கடையில் பொருட்கள் வாங்கும் பொது நமது அட்டையை அதற்குரிய கருவியில் தேய்த்து தொகையை நமது கணக்கில் சேர்த்து விடுவார்கள். 2 பில் கொடுப்பார்கள். ஒரு பில்லை கையொப்பம் இட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு மற்றொரு பில்லை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். சில கடைகளில் 1 அல்லது 2 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிப்பார்கள். மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது சேவை கட்டணம் இருக்கும்.

இணையத்தில் உபயோகிக்கும் முறை:
இணையத்தில் உபயோகிக்கும் போது 16 இலக்க கிரடிட் கார்டு நம்பரையும் 3 இலக்க CVV நம்பரையும் கொடுக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங், ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவற்றிற்கு பயன் படுத்தலாம்.

இவ்வாறு நாம் ஷாப்பிங் செய்யும் விபரங்களை உடனக்குடன் இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் தவறு இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தெரியப் படுத்தி சரி செய்து கொள்ள முடியும்.

நான் கவனத்தில் கொண்டது
1) அந்தந்த மாதத்திற்கான பில் தொகையை முழுவதுமாக கட்டி வட்டியை தவிர்த்து விடுவேன். அவர்கள் வட்டி கணக்கிடும் முறையை நம்மால் அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

2) கூடுமான வரை கிரெடிட் கார்டு ஐ பயன்படுத்தி பணம் எடுப்பதை தவிர்த்து விடுவேன்.

3) எனது அலுவலக கணினியைத் தவிர வேறு எந்த கணினியையும் கிரெடிட் கார்டுக்காக உபயோகிக்க மாட்டேன். ப்ரொவ்சிங் சென்டர் மிகவும் அபாயகரமானது.

4) மொஜில்லா ப்ரோவ்செரை (Mozilla Browser) மட்டுமே உபயோகிப்பேன். உபயோகித்தவுடன் ப்ரொவ்ஸெர்லிருந்து அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நீக்கி விடுவேன், ஒவ்வொரு முறையும்.

5) கிரெடிட் கார்டு தானே என்று அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டேன்.

6) அவ்வப்போது கஷ்டமெர் கேர் சென்டெரில் இருந்து ஏதேனும் ஆப்பஃர் (Offer) தருவதாக அழைத்தால் கூடுமான வரை தவிர்த்து விடுவேன்.

பலன்கள்:
1) அவசரமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டிய போது நமது கையில் பணம் இல்லாதபோது மிகவும் உபயோகமாக இருக்கும்.

2) அவசரமாக பணம் தேவைப்படும் போது, நமது நண்பர்களிடமே கேட்க கூச்சப்படும் போது இது மிகவும் உதவி செய்யும்.

3) வெளியூர் சென்றிருக்கும் போது ஏதேனும் அவசரத் தேவை எனில் ஆபத்பாந்தவனாக உதவும்.

4) நாம் செலவு செய்யும் ஒவ்வொரு 50 ரூபாய்க்கும் 1 பாயிண்ட் கிடைக்கும். இந்த பாயிண்ட்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

முடிவாக
கிரெடிட் கார்டு என்றவுடன் எதோ என்னமோ என்று பயப்படத் தேவையில்லை. நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் பலன் தெரியும். கட்டுப்பாடான மனம் உள்ளவர்கள் மட்டுமே எந்த வித தொந்தரவும் இன்றி பயன் படுத்தலாம். கட்டுப்பாடான மனம் இல்லை எனில் கண்டிப்பாக கிரெடிட் கார்டை தவிர்த்து விடுவது புத்திசாலித்தனமானது. கிரெடிட் கார்டால் ஏற்படும் நன்மை தீமை அனைத்துமே உங்கள் கையில் தான் இருக்கிறது. அளவுக்கு மீறி செலவு செய்து விட்டு, பணம் கட்டாமல், வட்டி மேல் வட்டி ஏறி, பின் வங்கிகளை குற்றம் சொல்லி பயன் இல்லை. கிரெடிட் கார்டு மோசடியால் கோடிக்கணக்கான பணம் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் சொல்கிறது.


டிஸ்கி: நான் பயன்படுத்திய கிரெடிட் கார்டு எஸ்.பீ.ஐ. தற்பொழுது நான் என்னுடைய கிரெடிட் கார்டை கேன்சல் செய்து விட்டேன். ஒரு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் கேன்சல் செய்து விட்டேன். மற்றபடி என்னை பொறுத்தவரை மிகவும் உபயோகமாகவே இருந்தது.

Wednesday, March 4, 2009

பள்ளி நாட்கள்!

இங்கே சில பள்ளிகூட நாட்களின் உரையாடல்கள்...உங்களின் புன்னகைக்காக....


ஆசிரியர்: What is your name?
மாணவன்: என்னுடைய பெயர் சூர்ய பிரகாஷ்!
ஆ: நான் ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்!
மா: My Name is Sunlight!



ஆசிரியர்: What is your name?
மா: My Name is Golden Milk!
ஆ: என்ன மாதிரியான பெயர் இது? உண்மையான பெயர் சொல்!
மா: தங்கபால்


ஆசிரியர்: 1869 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
மா: காந்திஜி பிறந்தார்!
ஆ: 1873 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
மா: காந்திஜிக்கு 4 வயது ஆகி இருந்தது!

ஆசிரியர்: What is the full form of Maths?

மா: Mentally Affected Teachers Harassing Students!


ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?
மா: சகோதர பாசம்!

ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்?
மா: ஒரு நாள் விடுமுறை!


ஆசிரியர்: யாரவது ஒருவர் தற்செயலுக்கு (coincidence) ஒரு உதாரணம் தர முடியுமா?

மா: சார், என் அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்!


ஆசிரியர்: உன் அப்பாவின் வயது என்ன?
மா: என் அப்பாவின் வயதும் என் வயதும் ஒன்றே!
ஆ: எப்படி இது சாத்தியம்?

மா: நான் பிறந்தே பிறகே அவர் அப்பவானார்!

ஆசிரியர்: அங்கு ஒரு தவளை இருக்கிறது, ஒரு கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது, ஒரு கிலோ உருளை கிழங்கின் விலை 3 ருபாய்... அப்பொழுது என் வயது என்ன?
மா: 32 வயது!
ஆ: எப்படி உனக்கு தெரியும்?
மா: என்னுடைய சகோதரியின் வயது 16, அவள் ஒரு அரைப் பைத்தியம்!