Sunday, July 31, 2011

லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?


வாங்க...வாங்க... அப்ப அவசியம் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது.

லோன் தவணை(Due) முடிந்தவுடன் நீங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பேப்பரில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர் ஆக முடியும். மறவாமல் இன்சூரன்ஸ் பேப்பரிலும் இந்த ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வண்டிக்கு ஏதேனும் இன்சூரன்ஸ் பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் பணம் உங்கள் பெயருக்கு வரும், இல்லை எனில் நீங்கள் லோன் பெற்ற வங்கிக்கு பணம் சென்று விடும்.

சரி இப்போது இதை எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1) நீங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி 15 நாட்களுக்குள் உங்கள் வங்கியிலிருந்து NOC (No Objection Certificate) மற்றும் FORM-35 இந்த இரண்டும் தலா இரண்டு காப்பிகள் உங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி  அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பாவிட்டால் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த இரண்டையும் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

2) உங்கள் வண்டிக்கு புகை கட்டுபாடு அலுவலகத்தில் ஒரு செர்டிபிகட் வாங்கி கொள்ளுங்கள். இது உங்கள் வண்டி, அரசு நிர்ணயித்துள்ள அளவின் படியே புகையை சுற்று சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வெளிவிடுகிறது என்பதை உறுதி செய்யும்.

3) மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இரண்டு FORM-35 மற்றும் ஒரு NOC காப்பியை, உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’யும் எடுத்துக்கொண்டு RTO அலுவலகம் சென்று ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டியதற்கு உண்டான தொகையை செலுத்திவிட்டு அந்த அலுவலகத்திலேயே கொடுத்து விடுங்கள்.

4) உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கி சான்றளித்து, ஒரிஜினல் மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இந்த இரண்டையும் உங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இப்போது உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கம் செய்தாயிற்று. இப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர். 

சரி இப்போது உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் செர்டிபிகட்’ல் எப்படி  ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1) உங்கள் வண்டியின் ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் செராக்ஸ் பேப்பர், ஒரு NOC copy இவற்றோடு ஒரு விண்ணப்பத்தை எழுதி இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பவும்.

2) இன்சூரன்ஸ் அலுவலத்தில் இருந்து ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற புதிய இன்சூரன்ஸ் பாலிசி அனுப்பி வைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்போதுதான் உங்கள் வேலை முழுமை அடைந்ததாக அர்த்தமாகும்.

குறிப்பு: NOC யின் ஆயுட்காலம் மூன்று மாதங்கள்தான். அதற்குள் இந்த வேலைகளை நீங்கள் முடித்து விடவேண்டும். இல்லையெனில் கட்டணம் செலுத்தி வங்கியிலிருந்து மீண்டும் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.

எனவே லோன் தவணை (Due) முடிந்தவுடன் உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்கம் செய்துகொண்டு தேவை இல்லாத டென்ஷனை தவிர்த்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

Thursday, June 30, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 30-06-2011


இந்த ஜூலை 2001 மாதத்திற்கு சில சிறப்புகள் உள்ளதாம். ஒரு மெயில் வந்தது.
1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11  இது போல் தேதிகள் வருகிறது.
மேலும் இந்த மாதத்தில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் வருகிறதாம். இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமாம். இதை சீனர்கள் Money Bags என்று அழைப்பார்களாம்.

உங்கள் வயதுடன், நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களை கூட்டினால் 111 என்று வருமாம். இது உலகில் பிறந்த எல்லோருக்கும் பொருந்துமாம். இதைதான்  Year of Money என்கிறார்கள்.
இந்த செய்தியை நம் நண்பர்களுக்கு தெரிவித்தால் நான்கு நாட்களுக்குள் நமக்கு பணம் வருமாம். இல்லை என்றால் நாம் பணம் இல்லாமல் இருப்போமாம்.
(
பய புள்ளைங்க எப்படியெல்லாம் பயப்படுத்துதுன்னு பாருங்க....)
*************************************************************

கல்வியில் அரசியலை புகுத்தியது மிகுந்த வேதனை அளிக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களது போட்டியில் நம் குழந்தைகள்தானே பாதிக்கப் படுகிறார்கள், அவர்கள் குழந்தைகள் அல்லவே?!? ஒருவேளை பழைய பாடத் திட்டம் என்று தீர்ப்பு வந்தால் புத்தகம் கிடைக்க ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும். இரண்டு மாத படிப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது? எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி தமிழ் நாட்டு தலை எழுத்தை தெளிவாக விளக்கி விடுகிறது. நீங்களே பாருங்கள்.

அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் சண்டை...
விவாகரத்து.
தீர்ப்பு...
அப்பாவிடம்
5 வருடம்
அம்மாவிடம்
5 வருடம்
தவிக்கும் குழந்தையின்
பெயர்
தமிழ்நாடு

*************************************************************

பூண்டு (சமைக்காதது), எலுமிச்சை சாறு போன்றவை நம் உடலுக்கு பல நன்மைகள் தருவது உங்களுக்கு தெரியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்த இரண்டையும் நம் பல்லில் நேரடியாக படாமல் உட்கொள்வது நம் பல்லுக்கு பாதுகாப்பானது, ஏனெனில் இவை பல் எனாமலை பதம் பார்த்து விடும். கவனம்.......


*************************************************************

தமிழ் நாட்டு மாணவர்களா.....கொக்கா....
ஹி..ஹி... கீழே உள்ள படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கி படித்துப் பார்க்கவும். உங்களுக்கே புரியும்.......








 
*************************************************************
நகைச்சுவைப் பக்கம்.....

டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்.
டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.
டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.
டீச்சர்: ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.
டீச்சர்: டேய்..ஸ்டுபிட்... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராறு?
பையன்: பேர குழந்தைகள்
டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன?
பையன்: நாம் இருவர் நமக்கு இருவர்....
டீச்சர்: ?!?..............

*************************************************************

வாழ்க வளமுடன்!
 

Thursday, April 21, 2011

என்று நாம் கற்போம்

சமீபத்தில் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது அந்த நாட்டு மக்கள் எவ்வளவு பொறுப்பாக, கண்ணியமாக, கட்டுபாட்டோடாக, குறிப்பாக சுயநலமில்லாமல் பொது நலத்தோடு நடந்து கொண்டார்கள் என்பதை படிக்க நேர்ந்தது. ஆனால் அத்தகைய சூழல் நம் நாட்டில் ஏற்பட்டால் அவ்வாறு நடந்து கொள்வோமா
என்பது மிகப்பெரிய கேள்விக்குறி! அப்படி ஒன்றை ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகிப் படிக்கவும்


எப்படி இருந்தாலும் இத்தகைய ஒரு பேரழிவு  உலகில் இனி எப்போதும் ஏற்படாமலிருக்க  எல்லாம் வல்ல  இறை ஆற்றலை வேண்டிக்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

Friday, February 18, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 18-02-2011

இன்று (18-02-2011) நம் இந்தியாவில் விமான சேவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மென்மேலும் இந்த சேவை நல்லமுறையில் தொடர வாழ்த்துவோம்.

அப்புறம் ஒரு சின்ன தகவல்:-

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சகாப்தம் 18 பிப்ரவரி, 1911ஆம் ஆண்டு, ஹென்றி பைகுயட் ஒரு பிப்ளேனில் 8500 மெயில்களை எடுத்துகொண்டு அலகாபாத்திலிருந்து நைனிக்கு 6 மைல்கள் பறந்து  சென்றதில் தொடங்கியது.
*************************************************************

சென்சஸ் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 தொடங்கி பிப்ரவரி 28, 2011 வரை  நடக்கிறது. தவறாமல் அனைவரும் தங்கள் தகவல்களை அளித்து, விடுபடாமல் இந்த கணக்கெடுப்பில் தங்களை சேர்த்துகொள்வதை  உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு, இந்த வலை தளத்தை பாருங்கள்.
http://www.census.tn.nic.in/
http://www.censusindia.gov.in/

*************************************************************

சமீபத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியது உங்களக்கு தெரியும். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்திய விதம் கொஞ்சம் மனதை நெருடியது. அதாவது தங்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த அவர்களுக்கு எப்படி
மனம் வந்தது எனத் தெரியவில்லை. மாட்டின் ரத்தம்தான் பாலாக மாறி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டப் பாலை வீணாக சாலையில் கொட்டுவதைத் தவிர்த்து வேறு வகையில் போராடி இருக்கலாமோ என ஆதங்கப்பட வேண்டியதை யாரும் மறுக்கமுடியாது என நினைக்கிறேன்.
*************************************************************

செல்போனின் கதிர்வீச்சு நமது உடல்நலத்தை பாதிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைபற்றிய எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் எந்த விதத்திலும் இதுவரை வரவில்லை. மாறாக பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள்நடந்து கொண்டே பேசுங்கள், இரவு முழுவதும் பேசுங்கள் என்று மூளை சலவை செய்து கொண்டுதான் விளம்பரம் வருகிறது. இதற்கு  காரணம் பலவாக இருந்தாலும் , பல்லாயிரக்கணக்கான கோடிகள் சம்பந்தப்பட்ட வியாபாரம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். எனவே அதைப்பற்றி எதையும் எதிர்பார்க்காமல் நம் நலத்தை நாம் காத்துகொள்வதே உத்தமம். எந்த இடத்தில் எல்லாம் லேன்ட்லைன் இருக்கிறதோ அங்கெல்லாம் செல்போனைத் தவித்து, லேன்ட்லைன்'ஐ பயன்படுத்துங்கள். உங்கள் உறவினர்/நண்பர் வீட்டில் லேன்ட்லைன் இருந்தால் பெரும்பாலும் அதிலேயே தொடர்பு கொண்டு அவர்கள் உடல் நலத்தை பேணுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் செல்போனை உபயோகிக்கலாம். குறிப்பாக செல்போனை குழந்தைகள் உபயோகிப்பதை அடியோடு தவிர்ப்பது நலம்.

*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....
ஒரு குடிகார கணவன் குடித்துவிட்டு தன்னுடன் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறான்.  "இங்கே பார்! ஒரு பெரும் காட்டுக் கரும்  குரங்கு!" என்றான்.
மனைவி சிரித்துக்கொண்டே "ஐயோ... இது குரங்கு இல்லை. பூனை!" என்றாள்.
அதற்கு  கணவன் சொல்கிறான்...
 "
நான் உன்னிடம் பேசவில்லை, இந்த பூனையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்!"
 
*************************************************************

வாழ்க வளமுடன்!

Friday, February 4, 2011

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்


சமீபத்தில் ஒரு மருந்து கடை ரசீதின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக மருந்து சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடும் சில  சுருக்கங்களின் விளக்கம்:-
STAT(statim) - Start Immediately - உடன்  தொடங்கவும்.
O.M. Omni mane (Morning Only) காலை மட்டும்.
O.D. Omni die(Daily Only)  தினசரி ஒன்று மட்டும்.
B.D Bis die(Daily twice) தினசரி இரண்டு.
T.D.S Ter die sumendus (Thrice daily) தினசரி மூன்று.
Q.D.S Quarter die sumendus (Four times only) தினசரி நான்கு.
Q.Q.H Quarta quaque hara(Every four hours) நான்கு மணி நேரத்திற்கு ஒன்று.
A.C./B Ante cibum (Before Food) சாப்பிடும் முன்.
P.R.N. Pro re neta (when required) தேவைப்படும் பொது.
S.O.S Only acute pain. வலி ஏற்படும் பொது.
H.S. One at night இரவு மட்டும்.

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

1. மருத்துவர் குறிப்பிட்ட காலம்வரை எழுதிக்கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடைவிடாமல் சாப்பிடவும்.

2. மருந்துகள் வாங்கும்போது மருந்தின் பெயர், காலாவதியாகும் தேதி போன்றவற்றை அட்டையில் சரிபார்த்து வாங்கவும். போதிய வெளிச்சத்தில் மருந்தை சரிபார்க்காமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. மாத்திரை அட்டையிலிருந்து பிரித்தேடுக்கும்போது மீதமுள்ள மாத்திரைகள் பக்கம் காலாவதியாகும் தேதி இருக்கும்படி பிரிக்கவும்.

4. மருந்துகளை குழந்தைகளின் கைகளில் எட்டாமலும், உலர்ந்த இடத்திலும் வைக்கவும்.

5. மருத்துவரிடம் செல்லும்  ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கிய மருந்து சீட்டையும், கடை ரசீதையும் தவறாமல் எடுத்து  செல்லவும்.

6. ஏதேனும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் மருந்தாளுனரிடம் தயக்கமில்லாமல் கேட்கவும்.

வாழ்க வளமுடன்!

Tuesday, February 1, 2011

மோசடி செல் சேவை/டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள்

நான் பீ.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு சிம் வைத்துள்ளேன். ஒரு நாள் திடிரென ஒரு மெசேஜ் வந்தது. நீங்கள் மொபைல் ரேடியோ சேவையில் சேர்ந்துள்ளீர்கள். அதற்காக மாத கட்டணமாக  19 ருபாய் பிடித்தம் செய்துள்ளோம் என்று. நான் எந்த மெசேஜ்ம் இது சம்பந்தமாக அனுப்பவில்லை. எப்படி இது சாத்தியம்? உடனே கால் சென்டருக்கு போன் செய்தேன். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட போராட்டங்களுக்கு பிறகு மறுநாள் கால் சென்டர் தொடர்பு கிடைத்தது. அவர்கள் இது சம்பந்தமாக நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள்.

நானும் ஒரு புகார் கடிதம் ஒன்றை தயார் செய்துகொண்டு உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகம் சென்றேன். நீங்கள் உங்களை அறியாமலே ஏதாவது கீயை பிரஸ் செய்து இருப்பீர்கள், அதனால் உங்களுக்கு சப்ஸ்க்ரைப் ஆகி இருக்கும் என்றும்,  கழிக்கப்பட்ட 19 ருபாய் ஒன்றும் செய்ய முடியாது, இருந்தாலும் புகாரை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் சொல்லிவிட்டார்கள். புகார் கொடுத்ததற்கு எந்த ரெசிப்டும் கொடுக்க முடியாது என்றும், அடுத்த மாதம் இதே நாள் உங்களிடமிருந்து இந்த கட்டணம் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் உங்கள் பிரச்சனை சரியாகிவிட்டது என்று மிகவும் பொறுப்பாக பதில் தந்தார்கள்.

என்ன கொடுமைங்க?!? இப்படி எத்தனை வாடிக்கையாளரிடம் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் கொள்ளை அடித்துகொண்டிருக்கிறார்கள்? என் சம்மதம் இல்லாமலேயே என் பாக்கெட்டிலிருந்து 19 ருபாய் கொள்ளை அடிப்பதற்கும், இந்த செயலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த பகல் கொள்ளைக்கு செல் சேவை நிறுவனங்கள் வேறு துணை போகிறதே? நாட்டில் எத்தனை படிப்பறிவு இல்லாத ஏழை வாடிக்கையாளர்களிடம் இது போன்ற நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்களோ தெரியவில்லை. என்னைப் போன்று இதை கவனித்து புகார் செய்யா விட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணமும் கொள்ளை அடிக்கப் படலாம். அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் வந்து கொண்டிருக்கிறதே என்று படித்து பார்க்காமல் எந்த  மெசேஜ்ஐயும்  அழித்து விடாதீர்கள். உங்களுக்கு தெரியாமலே உங்கள் பணம் கொள்ளை அடிக்கப் படலாம்.


இத்தனைக்கும் நான் Do Not Disturb என்பதில் பதிவும் செய்து உள்ளேன். இதனால் ஒரு பயனும் இல்லை. தினமும் குறைந்தது 4, 5 தேவை இல்லாத மெசேஜ் வருகிறது. இந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ட்ராய் (TRAI Telephone Regulatory Authority of India) அதாவது தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம் என்ற அமைப்பில் இருந்து லைசன்ஸ் பெற்றே வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கிறது. எனக்கு வரும் மெசேஜ்ஐ பாருங்கள். இன்று இரவு 5 பெண்கள் உங்களிடம் சாட்டிங் செய்ய விரும்புகிறார்கள், விரும்பினால் SEND DOSTG TO xxxxx. இப்படியெல்லாம் மெசேஜ் வருகிறது. எத்தனை சபல எண்ணம் உடைய விடலைப் பையன்கள், ஆண்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இதெற்க்கெல்லாமா TRAI லைசன்ஸ் தருகிறது. டெலிமார்க்கெட்டிங்கிற்கு ஒரு வரைமுறை இல்லையா? போகிறபோக்கை பார்த்தால் இன்று இரவு பெண்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறோம், விரும்பினால் SEND DOSTG TO xxxxx என்று அனுப்பி வைத்தாலும் ஆச்சர்யப்பட வேண்டிஇருக்காது.

அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் அனுப்பினால் லட்ச்ச கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது. என்ன பிரயோஜனம்? டெலிமார்க்கெட்டிங்கிற்கு லைசன்ஸ் கொடுத்து விட்டு அவற்றை ட்ராய் தொடர்ந்து கண்காணிக்காததையே இது காட்டுகிறது.

இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு வைத்துள்ளது TRAI?
யாருக்கு தெரியும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்! செல்போன் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக ஆ(க்)கிவிட்டபிறகு இத்தனை தொந்தரவுகளுடன் அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையில் வேறு என்னதான் செய்வது? புலம்பிக்கொண்டே பயன்படுத்துவதைத் தவிர?!?

வாழ்க வளமுடன்!

Wednesday, January 12, 2011

எந்த வேலை மேலானது? கண்ணியமானது?




Dignity of Labour என்பது எல்லா வேலைகளையும், தொழில்களையும் சமமாக பாவிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்ற உயரிய அர்த்தம் கொள்ளப்படவேண்டியது. உண்மையில் எந்த வேலைகளிலும்  ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை. நாம் பார்க்கும் பார்வைகளில்தான்  ஏற்றத்தாழ்வு என்பது இருக்கிறது.  அது எவ்வளவு பெரிய தவறு என்று என்றேனும் நாம் சிந்தித்து இருக்கிறோமோ என்றால் இல்லை என்பதே பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கும். அதைப்பற்றிய ஒரு சிந்தனையைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். 

               
ஆங்கிலத்தில் White collar Job எனும் தினம் நேர்த்தியாக சலவை செய்யப்பட்ட ஆடைகளையே உடுத்திக்கொண்டு அலுவலகம் சென்று வரும் வேலை மட்டுமே அனைவரும் செய்ய ஆசைபட்டால் மற்ற வேலைகளை யார்தான் செய்வது? யோசித்துப்பாருங்கள்...  நீங்கள்  பள்ளிக்கு/ அலுலகத்திற்கு வரும்  முன்புஒரு தொழிலாளி  அதிகாலையிலே வந்து உங்கள் வகுப்பறையை/ அலுவலக அறையை   கூட்டி பெருக்கி சுத்தம் செய்யாவிட்டால் நீங்கள் போய் அமர்ந்து படிக்கவோ உங்கள் வழக்கமான வேலையையோ  செய்ய  முடியுமா? கழிப்பறையை நாள்தோறும் சுத்தம் செய்யாவிட்டால் நீங்கள் அதை பயன் படுத்த முடியுமா

 
நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இங்கு பள்ளிக்கு வந்து சேரும் வரை எத்தனை தொழிலாளர்களின் எத்தனை விதமான வேலைகளையும், உழைப்பையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று ஒருநாளாவது சிந்தித்து உள்ளீர்களா? உங்களுக்கு தேவையான தண்ணீரை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததில் ஒரு தொழிலாளியின் உழைப்பு. நீங்கள் உடுத்தி இருக்கும் ஆடைகளுக்கு தேவையான பருத்தியை விளைவித்தது, அதை நேர்த்தியாக உங்களுக்கு வடிவமைத்து கொடுத்தது, நீங்கள் சாப்பிட்ட உணவை விளைவித்தது, நீங்கள் பள்ளிக்கு வந்த வாகனத்தை வடிவமைத்தது, அதை ஓட்டி வந்தது, அந்த வாகனம் இலகுவாக செல்ல சாலையை உருவாக்கியது என கணக்கிலடங்கா பல தொழிலாளர்களின், பலவிதமான வேலைகள் அடங்கி உள்ளது.


         
இதில் எந்த தொழிலாளர் உயர்ந்தவர், எந்த வேலை சிறந்தது, எந்த வேலை தாழ்ந்தது, எந்த தொழிலாளர் தாழ்ந்தவர் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேறுபடுத்திப் பார்க்க முடியுமா? இதில் எங்கே ஏற்றத்தாழ்வு இருக்கிறது? இந்த உலகத்தில் ஒவ்வொரு தொழிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. எதையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று சரியாக நடை பெற முடியாது.

முடி திருத்துபவர் இல்லை என்றால் எல்லோரும் ஆதி மனிதர்களைப்போல் நீண்ட முடியுடனும், தாடியுடனும் இருக்க வேண்டி இருக்கும். ஒரு முறை நமது மகாத்மா காந்தியடிகள் கூட அவரது கேசத்தை அவரே வெட்டி சரி படுத்தி கொண்டார். அதை அவர் தாழ்வாக எண்ணவில்லை. சாலையை சுத்தம் செய்பவர், மண்பாண்டம் செய்பவர், ஆடை வெளுப்பவர்உணவிற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் விவசாயி, நமது வீட்டை கட்டி கொடுத்த தொழிலாளி,  தினமும் அதிகாலையிலேயே செய்தி தாள், பால் விநியோகிப்பவர் என சொல்லி கொண்டே போகலாம். இதில் ஒவ்வொரு வேலையும் இன்றியமையாதது, அவசியமானது, சமமானது.

         ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த தொழில்களை செய்யும் தொழிலார்களை நாம் சமமாக மதிப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் மின்விசிறி, குளிர்சாதன அறைகளில் இருந்து கொண்டு செய்யும் வேலைகள் மட்டுமே உயர்ந்தது எனவும், மற்ற வேலைகள் எல்லாம் அதைவிட தாழ்ந்தது எனவும் ஒரு தவறான சமுதாய சிந்தனையை நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய அறிவீனமான எண்ணம் என்பதை இப்போதாவது  சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
 
என்றேனும் உங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள், உங்கள் வகுப்பறையை சுத்தபடுத்தும் தொழிலாளிகள், உங்களை பாதுகாப்பாக  பள்ளி கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர் போன்றவர்களிடம் வணக்கம் சொல்லி அவர்களின் நலம் விசாரித்து இருக்கிறீர்களா? இல்லை என்றுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கும். ஏன், இன்னும் சொல்லபோனால் உங்களை விட வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்த அவர்களை பெயர் சொல்லி அழைத்தும், ஒருமையில் மதிப்பின்றி பேசியும் கூட இருப்பீர்கள் என்பதுதான் சற்று கசப்பான உண்மை.

அந்த மதிப்பு இல்லாத வேலையாக நீங்கள் எண்ணுபவற்றை, அந்த தொழிலாளிகள் செய்ய மறுத்து விட்டால்,  நீங்களே அதை உங்களுக்காக செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு வேலையுமே மூளையை, திறமைகளை உபயோகித்து செய்ய வேண்டியதே அன்றி எவரும் எந்த வேலைகளையும் எளிதாக செய்து விடமுடியாது. மருத்துவர்பொறியாளர், ஆட்சித்தலைவர், வழக்குரைஞர் போன்றவர்கள் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி வேலை செய்வது போலவும்இதர  வேலைகளை செய்பவர்கள் வெறும் உடல் உழைப்பைப் பயன்படுத்தி மட்டுமே வேலை செய்கிறார்கள் போன்ற தவறான எண்ணம் சமுதாயத்தில் உள்ளது.  இதெல்லாம் ஒரு வேலையா என்று நீங்கள் தாழ்வாக நினைக்கும் ஒரு வேலையை நீங்களே செய்து பாருங்கள். அப்போதுதான்  அதை எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் நமக்காக அந்த தொழிலாளி உழைப்பதை உணர முடியும். கலை நயத்துடன் செய்யும் மேசை, நாற்காலிகள், மண்பாண்டங்கள், பாத்திரங்கள், கைவினைபொருட்கள், சிற்பங்கள் இவற்றில் எந்த வேலையை  மூளையோ  திறமையோ இல்லாமல் செய்து விட முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

       மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கூட உணவகங்களில் உணவு பரிமாறும் வேலைகளை, விடுமுறை நாட்களில் செய்து தங்களுக்கு தேவையான வருவாயை ஈட்டிக் கொள்கின்றனர். அந்த வேலைகளை அவர்கள் தாழ்வாக எண்ணுவதும் இல்லைஅந்த வேலையை செய்ய தயக்கம் கொள்வதும்  இல்லை. செருப்பு தைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் பின்னாளில் அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தார் என்ற வரலாறு நீங்கள் அறிந்திருப்பீர்கள்

                   என்றேனும் உங்கள் வேலையை  நீங்களே செய்து கொண்டதுண்டா? நீங்கள் சாப்பிட்ட தட்டை நீங்களே துலக்கி வைக்கலாம். உங்கள் ஆடையை நீங்களே துவைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டை சுத்தம் செய்யலாம்.  உங்கள் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சலாம். சில சமயங்களில் இதை நீங்களே செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலையாளின் விடுமுறை தினங்களில் இது உதவியாக இருக்கும். மேலும் அந்த வேலைகளை நீங்கள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல, அந்த வேலைகைளின் மீதான மதிப்பும், அந்த  வேலையை  செய்யும் தொழிலாளியின் மீதான மதிப்பும் உயரும்.  உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
               
     இனி அவர்களின் மீதான உங்கள் பார்வைகள் மாற வேண்டும். அவர்களிடம் நீங்கள் அன்பும், மதிப்பும் செலுத்த வேண்டும். அவர்கள் மீதான உங்கள் பார்வைகள் மாறும் போது, உங்கள் மீதான அவர்களின் பார்வையும், அன்பும், மதிப்பும் கண்டிப்பாக அதிகரிக்கும். அவர்களின் வேலைத் தரமும் உயரும். தனி மனித மாற்றத்தால் மட்டுமே சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

 
கடவுளின் படைப்பில் உயர்வோ தாழ்வோ இல்லாதபோது இந்த தொழில்களில் மட்டும் எவ்வாறு ஏற்றத்தாழ்வு இருக்க முடியும்? நம் எண்ணங்களில் தான் ஏற்றத்தாழ்வே அன்றி எந்த தொழில்களிலும் கண்டிப்பாக  ஏற்றத்தாழ்வு  என்பதே இல்லை. மனிதனை மனிதனாக மதியுங்கள். மாறாக அவர்கள் செய்யும் தொழிலை வைத்து எடை போடாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் உள்ளதை உணர்ந்தால் அவர் செய்யும் தொழிலுக்கும் தன்மானம், மதிப்பு உள்ளதை உணர்ந்து கொள்ளலாம். நேர்மையாக செய்யும் எந்த தொழிலுமே தாழ்ந்ததும் இல்லை, அதை செய்யும் தொழிலாளியும் தாழ்ந்தவரும் இல்லை என்ற உண்மையை, உலக நியதியை எல்லோரும் உணர்ந்து விட்டால், இனி இங்கே மனிதர்களுள்ளேயும், அவர்கள் செய்யும் தொழில்களிலும் வேறுபாடோ, ஏற்றத்தாழ்வு என்பதோ இல்லாத சமதர்ம சமநீதி  சமுதாயம் உருவாகிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வாழ்க வளமுடன்!

Thursday, January 6, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 06-01-2011

நண்பர்கள்  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அப்படியே காபி, பிஸ்கட் எடுத்துக்கங்க..

*************************************************************
தற்போது சாலை பாதுகாப்பு வாரம்  கொண்டாடப்படுகிறது. அதில் என்ன உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள் என
நீங்களும் பாருங்கள். முடிந்த அளவு அதைப் பின்பற்ற முயலுங்கள்.


*************************************************************
மொபைல் போனிலிருந்து அதிகப் படியான கதிர்வீச்சு வருவதாகவும், அது நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவும் நீங்கள் சமீப காலமாக கேள்விபட்டு கொண்டு இருப்பீர்கள் அல்லவா? இந்த கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் Anti Radiation Chip  எனும் பொருளை தங்கள் மொபைலின் மீது பொருத்திகொண்டால் எந்த தீய விளைவுகளும் ஏற்படாது என அடிக்கடி தற்போது செய்திதாள்களில் பார்க்கிறேன். உங்களின் பார்வைக்காக இங்கே கொடுத்தும் இருக்கிறேன். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது, இதன் தரம் என்ன என தெரியவில்லை. வெளிநாடுகளிலும் இது போல் ஏதாவது உள்ளதா? இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து.


 *************************************************************

தமிழகத்தில் மின் கட்டணம் ஆன்லைனில் செலுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் உங்கள் வீட்டில் கணக்கீட்டாளர்  மீட்டர் ரீடிங் எடுத்த மறு நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விடவேண்டும் என்பது தெரியுமா? முன்பெல்லாம் மீட்டர் ரீடிங் எடுத்த அடுத்த மாதம் 15 தேதிக்குள் செலுத்தினால் போதும். இப்போது ரூல் மாறிவிட்டது போல. உங்கள் ஏரியாவில் இந்த விசயத்தை உறுதிபடுத்திக்கொண்டு அபராத கட்டணத்தை தவிருங்கள்.
*************************************************************

உலகின் முதன்முதலில் அனுப்பப்பட்ட SMS எங்கிருந்து என்ன செய்தி என்று தெரியுமா?
இங்கிலாந்தில் 1992ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நெய்ல் பேப்வொர்த் (Neil Papworth) என்பவர் ரிச்சர்ட் ஜார்விஸ் (Richard Jarvis) என்ற நபருக்கு Merry Christmas என்று அனுப்பினார்.
இது எனக்கு ஒரு நண்பர் SMS ல் அனுப்பியது.
*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....

ஏங்க படிச்சுக்கிட்டு இருக்கிற பையன போய் அடிக்கிறீங்க?!?

அட நீங்க வேற சார்! பரிச்சைக்கு கூட போகாம படிச்சுக்கிட்டு இருக்கான்!
 *************************************************************

வாழ்க வளமுடன்!